நாமக்கல் அருகே பெண் மீது தாக்குதல்: இளைஞர்கள் 2 பேர் கைது
நாமக்கல் அருகே பெண்ணை தாக்கியதாக இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.;
பைல் படம்
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் சித்ரா (42). இவர் ஏரிக்கரை அருகே விவசாய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த மாதம் 24ம் தேதி இவரது தோட்டத்தின் அருகே, ஈச்சவாரியைச் சேர்ந்த அன்பரசன் (22), ஜீவா (27) ஆகிய இருவரும் மது அருந்தியுள்ளனர். இதைப்பார்த்த சித்ரா விவசாய தோட்டத்தின் அருகே மது அருந்தக்கூடாது என கண்டித்துள்ளார். இதனால் இரு தரப்பிற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சித்ராவை, அன்பரசன், ஜீவா ஆகியோர் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து சித்ரா எருமப்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அன்பரசன், ஜீவா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.