அச்சப்பன் கோயில் சாட்டையடி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பவித்திரம் அருகே அச்சப்பன் கோவிலில் நடைபெற்ற வினோதமான சாட்டையடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Update: 2022-10-06 02:15 GMT

பவித்திரம் அருகே உள்ள அச்சப்பன் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண் பக்தர்களுக்கு, கோயில் பூசாரி சாட்டையடி கொடுத்து ஆசி வழங்கினார்.

பவித்திரம் அருகே அச்சப்பன் கோவிலில் நடைபெற்ற வினோதமான சாட்டையடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில், பவித்திரம் அருகே, பிரசித்தி பெற்ற அச்சப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், விஜயதசமி நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். விழாவில் சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குடும்பத்துடன் கூடுவார்கள். 2 நாட்கள் விழா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான பேய் விரட்டும் வினோத நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இதில் பங்கேற்றால் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறிப்பாக பெண்கள் அதிகளவில் கலந்து கொள்வது வழக்கம். அவ்வாறு பங்கேற்கும் பெண்கள் கோயில் வளாகத்தில் உள்ள திறந்தவெளியில் நீண்ட நெடுந்தூரம் கைகளை மேலே கூப்பியபடி மண்டியிட்டிருப்பர்.

அவ்வாறு கைகளை மேலே கூப்பியபடி மண்டியிட்டிருப்பர்களை கோயில் பூசாரி மற்றும் கோமாளி வேடமிட்ட நபரும் பிரம்மாண்டமான ஆளுயர சாட்டையால் அடித்து ஆசிர்வதாம் வழங்குவார்கள். இவ்வாறு பூசாரி அடிக்கும் சமயத்தில் உடலில் இருந்து தீய சக்திகள் வெளியேறிவிடும். தாங்கள் நினைத்ததும் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடையே நிலவுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்ததால், விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கோயில் திருவிழா விஜயதசமியான நேற்று தொடங்கியது. முதல் நாள் விழாவான நேற்று காலையில் சாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தீபாராதணை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்ட. மதியம் கோவில் வளாகத்தில் பேய் விரட்டும் சாட்டையடி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் தங்களது கைகளை மேலே கூப்பியபடி நீண்ட தூரத்திற்கு மண்டியிட்டிருந்தனர். பெண் பக்தர்கள் அதிகளவில் இருந்தனர். அப்போது காண்போர் பிரமிக்கும் வகையில் ஆளுயர சாட்டையை ஏந்தி வந்த கோவில் பூசாரி மற்றும் கோமாளி வேடமிட்டவரும், பக்தர்களின் கைகளில் சாட்டையை சுழற்றிச் சுழற்றி அடித்தனர். சிலர் ஒரு அடியுடன் எழுந்து சென்றனர். ஒரு சிலர் பல சாட்டையமடி அடிகள் வாங்கிய பின்னரே எழுந்தனர். இது காண்போரை மெய் சிலிர்க்கச் செய்தது.

இதைத்தொடர்ந்து அச்சப்பன் கோவிலில் நடைபெற்ற வினோதமான சாட்டையடி திருவிழாவில், பராம்பரிய சேர்வை நடனம் மற்றும் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சேர்வை நடனத்தின்போது மேள தாளத்திற்கு ஏற்றாற்போல் கோமாளி மற்றும் பூசாரிகளும் நடனமாடியது காண்போர் ரசிக்கும் வண்ணம் இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News