பழையபாளையம் ஏரியில் மூழ்கி அக்கா, தம்பி பலி: கிராம மக்கள் சோகம்
பழையபாளையம் ஏரியில் மூழ்கி அக்கா, தம்பி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.;
சேந்தமங்கலம் அருகே சிவநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கருப்பசாமி (36), பாலன் (32). இவர்களின் 4 குழந்தைகளும் சிவநாயக்கன்பட்டி அருகே பழையபாளையத்தில் உள்ள பாட்டி செல்லம் வீட்டில் இருந்தனர். இன்று மதியம் குழந்தைகள் நால்வரும் பாட்டி செல்லத்துடன் பழையபாளையம் ஏரிக்கரை மீது நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பாலனின் குழந்தைகள் கனிஷ்கா (8), மதன் (7) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஏரியில் தவறி விழுந்தனர். அவர்களை பிடிக்க முற்பட்ட கருப்பசாமியின் குழந்தைகளான சஞ்சீவி (11), மிதிலேஷ் (8) ஆகிய இருவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தனர். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாட்டி செல்லம் ஏரியில் குதித்து சஞ்சீவி மற்றும் மிதிலேசை மீட்டார்.
இருப்பினும், கனிஷ்கா, மதன் ஆகிய இருவரையும் மீட்க முடியவில்லை. அவர்கள் பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களது உடல்களை அங்கிருந்தோர் மீட்டு சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சேந்தமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் இருவர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பழையபாளையம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.