எருமப்பட்டி அருகே தூய்மைப் பணியாளரை தாக்கிய 2 பேர் கைது

சேந்தமங்கலம் அருகே, எருமப்பட்டி அருகே தூய்மைப் பணியாளரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-01-20 10:30 GMT

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள வடவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் செந்தில்குமார் (35). வடவத்தூர் கிராம பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை, அவர் இரவு நேரத்தில் வடவத்தூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் படுத்து தூங்குவது வழக்கம்.

சம்பவத்தன்று, செந்தில்குமார், அதே ஊரைச் சேர்ந்த நல்லையன் மகன் கருப்பண்ணன் (27) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் கருப்பண்ணன் அங்கிருந்து சென்று விட்டார். செந்தில்குமார் அங்கு படுத்து தூங்கினார். அப்போது ஜம்புமடையை சேர்ந்த சுப்பிரமணி மகன் சரத்குமார் (21), நடராஜன் மகன் விஜயராஜ் (21) மற்றும் அவருடைய நண்பர்கள் 5 பேர் அங்கு சென்று செந்தில் குமாரை எழுப்பி கருப்பன்ணன் எங்கு சென்றார் என்று கேட்டுள்ளனர்.

அப்போது, தனக்கு தெரியாது என்று கூறிய செந்தில்குமாரை, அவர்கள் தாக்கினர். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். இதைக்கண்ட அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். புகாரின் பேரில் எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமார், விஜயராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரைத் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News