இராசிபுரத்தில் பட்டுக்கூடு ஏல விற்பனை மையம்: தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி
பட்டுக்கூடு ஏல விற்பனை மையத்தை ராசிபுரம் பகுதியில் துவக்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசுக்கு பட்டுக்கூடு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.;
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த புதுப்பட்டி பட்டணம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2,400 ஏக்கர் பரப்பில் மல்பெரி பயிரிடப்பட்டு, பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பட்டுக்கூடு உற்பத்தியில் 1,600 விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பட்டுப்புழு வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், தேவைப்படும் மாவட்டங்களில் பட்டுக்கூடு விற்பனை மையம் அமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யும் பட்டுக் கூடுக்கு உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என திமுக சார்பில் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், முத்துகாளிப்பட்டியில் பட்டுக்கூடு ஏல விற்பனை மையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு பட்டு விவசாயிகள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதையொட்டி, நாமக்கல் மாவட்ட பட்டு உற்பத்தி விவசாயிகள், கைத்தறி நெசவுத் துறை அமைச்சர் காந்தி, சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பட்டுப்புழு விவசாயிகள் சேலம், தருமபுரி போன்ற இடங்களுக்குச் சென்று பட்டுக்கூடு ஏல விற்பனையில் பங்கேற்று வரும் நிலையில், ராசிபுரம் பகுதியில் பட்டுக்கூடு ஏலமையம் தொடங்கப்பட்டுள்ளது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக பட்டு உற்பத்தி விவசாயிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், முத்துகாளிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் அருள் மற்றும் பட்டுவளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.