இராசிபுரம் அரசு மருத்துவமனை தரம் உயர்வு: பொதுமக்கள் மகிழ்ச்சி
இராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியை, மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக, தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
நாமக்கல், மோகனூர் ரோட்டில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை, தற்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக இராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி 13 கட்டிடங்களில் 142 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இது மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு கூடுதல் படுக்கை வசதிகள், ஸ்கேன் வசதி, ஆபரேசன் தியேட்டர் வசதி, லேப் வசதிகள், சிறப்பு மருத்துவ சிகிச்சை வசதிகள் அதிகரிக்கப்படும்.
இதனால் இராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் உயர் சிகிச்சைக்காக நாமக்கல் மற்றும் சேலம் நகருக்கு செல்வது குறையும். இராசிபுரம் அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.