உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றிக்கு கட்சியினர் பாடுபடவேண்டும்: தங்கமணி
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு, கட்சியினர் பணியாற்ற வேண்டும் என்று, தங்கமணி எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.;
ராசிபுரம் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட, பிள்ளாநல்லூர், ஆர்.பட்டணம், ஆர்.புதுப்பட்டி, வெண்ணந்தூர், அத்தனூர் உள்ளிட்ட டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான தங்கமணி நிகழ்ச்சிக்கு தலைவகித்து கட்சித் தொண்டர்களுடன் கலந்தாலோசனை நடத்தினார். முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், டவுன் பஞ்சாயத்து வார்டு கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய அதிமுக மாவட்டச் செயலாளர் தங்கமணி, கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு வார்டு வாரியாக தேர்தலில் போட்டியிடுவோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட வேண்டும். வேட்பாளர்களுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து, அனைத்து அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெறும் வகையில் பணியாற்ற வேண்டும். மேலும், கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து கவலைப்படாமல் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான களப் பணிகளை தொண்டர்கள் உற்சாகத்துடன் ஈடுபட வேண்டும் என்றார்.
ராசிபுரம் அதிமுக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், செல்வம், செழியன், பழனிசாமி, தாமோதரன், சுரேஷ்குமார் உள்ளிட்டபலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.