இராசிபுரம்: கோயில் நிலம் குத்தகைக்கு விடுவதை கண்டித்து மக்கள் மறியல்

இராசிபுரம் அருகே கல்லமலை பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-15 07:45 GMT

இராசிபுரம் அருகே கல்லமலை பெருமாள் கோயில் நிலத்தை குத்தகைக்கு விடுவதை கண்டித்து, திரளான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடபட்டனர்.

இராசிபுரம் அருகே குட்டலாடம்பட்டி கிராமத்தில்கல்லமலை பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சுமார் 3 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தில்,  அக்கோயில் அர்ச்சகர் குடும்பத்தினர், பல ஆண்டுகளாக, விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது அந்த நிலத்தை பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விடப் போவதாகவும், கோயில் அர்ச்சகர் கோயில் சாவியையும், கோயில் நிலத்தையும் 3 மாதங்களுக்குள், இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு அர்ச்சகர் குடும்பத்தினரும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இராசிபுரத்தில் இருந்து பனமரத்துப்பட்டி வழியாக சேலம் செல்லும் பஸ்சை நிறுத்தி,  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். தகவல் கிடைத்ததும், ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் அங்க விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்துசமய அறநிலையத் துறை அலுவலர்களிடம் இதுகுறித்து பேசி,  சுமுகத்தீர்வு காண்பதாக அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News