நாமகிரிப்பேட்டை அருகே செல்போன் சிக்னல் இல்லாததால் ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் அவலம் : மாணவ, மாணவிகள் அவதி

நாமகிரிப்பேட்டை அருகே, செல்போன் சிக்னல் கிடைக்காததால் கிராமப்புற மாணவ,மாணவிகள் ஆலமரத்தில் ஏறி உட்கார்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2021-07-04 09:15 GMT

நாமகிரிப்பேட்டை அருகே செல்போன் சிக்னல் கிடைக்காததால் ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள்.

ராசிபுரம்:

நாமகிரிப்பேட்டை அருகே, செல்போன் சிக்னல் கிடைக்காததால் கிராமப்புற மாணவ,மாணவிகள் ஆலமரத்தில் ஏறி உட்கார்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள், தனியார் வேலை வாய்ப்பு பயிற்சி மையங்கள், போன்றவை மூடப்பட்டு மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகளும், வேலை வாய்ப்புக்காக பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணம் செலுத்தி பயிற்சி பெற்று வருபவர்களும் ஆன்லைன் மூலம் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக கம்ப்யூட்டர்கள் வைத்திருப்பவர்களும், இல்லாதவர்களும் செல்போன் சிக்னல்களை மட்டுமே நம்பியுள்ளனர். பல கிராமப்புற மாணவ,மாணவிகள் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதற்காக, தங்களின் பெற்றோர்களை வற்புறுத்தி ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவழித்து ஆண்ட்ராய்ட் செல்போன்களை வாங்கி அதன் மூலம் கல்வி கற்று வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் மலை கிராமங்களிலும், மிகவும் சிறிய கிராமங்களிலும் செல்போன் டவர்கள் இல்லாததல் அங்கு செல்போன் சிக்னல்கள் கிடைப்பதில்லை. இதனால் புதிய செல்போன் வாங்கியும் பல மாணவ,மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தின் எல்லை பகுதியான நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள முள்ளுக்குறிச்சி, பெரப்பஞ்சோலை, பெரியகோம்பை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் அரசு மற்றும் தனியார், பள்ளி கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் செல்போன் டவர்கள் இல்லை. எனவே, சிக்னல்  சரியாக கிடைக்காததால் ஊருக்கு அருகே உள்ள உயரமான ஆலமரங்களை தஞ்சமடைந்து வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே ஆலமரத்தின் மீது ஏறி கிளைகளில் அமர்ந்து கொள்ளும் மாணவ, மாண விகள், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று பாடங்களை படித்து வருகின்றனர்.

மரக்கிளைகளில் ஏறுவதற்கு மாணவர்களை விட மாணவிகள் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரை பணயம் வைத்து உயரமான மரங்களில் ஏறி ஆன் லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு உதவிடும் வகையில் இப்பகுதியில் அரசு மற்றும் தனியார் செல்போன் கம்பெனிகளின் டவர்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் எம்.பி சின்ராஜ் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News