லாரியில் மதுபாட்டில் கடத்திய டிரைவர் ராசிபுரம் அருகே கைது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, கர்நாடகாவில் இருந்து லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், வெண்ணந்தூர் அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அதிகாலை நேரத்தில் அவ்வழியாக வந்த முட்டை லாரி ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில், லாரியில் 48 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் மறைத்து வைத்து, கடத்தி வந்தது ண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் லாரி டிரைவரிடம் விசாரித்த போது, அவர் நாமக்கல் அருகே உள்ள ஏளுர் பகுதியை சேர்ந்த சேகர் (40) என்பதும், விற்பனை செய்வதற்காக, பெங்களூருவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையொட்டி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரைவர் சேகரை கைது செய்தனர். மேலும் 48 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.