விவசாயியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டருக்கு சிறை தண்டனை
விவசாயி ஒருவரை மிரட்டி பணம் வாங்கிய வழக்கில், ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை.;
ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம்.
வெண்ணந்தூர் விவசாயி ஒருவரை மிரட்டி பணம் வாங்கிய வழக்கில், ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ராசிபுரம் கோர்ட்டில் இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர், கொளுஞ்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (48), விவசாயி. இவருக்கும், அவரது அவரது பெரியப்பா மகன் சவுந்திரராஜன் என்பவருக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. இது தொடர்பாக கடந்த 2008ம் ஆண்டு சவுந்திரராஜன், வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சுப்பிரமணியம் (62), வேலுவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தார்.
மேலும் புகாரின் பேரில், விசாரணை மேற்கொள்ளாமல், வேலுவை மிரட்டி அடித்ததுடன், அவரிடம் இருந்த ரூ.5,500 ரொக்கத்தை பிடுங்கிக் கொண்டாராம். இது தொடர்பாக வேலு, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் விரக்தியடைந்த விவசாயி வேலு, ராசிபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கடந்த 2013ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது, விசாரணை முடிந்து, ராசிபுரம் ஜேஎம் கோர்டு மாஜிதிஸ்திரேட், ரெகனா பேகம் தீர்ப்பளித்தார். அதில் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியத்துக்கு, இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2500 அபராதம் விதித்து தீர்பளித்தார். மேலும் மேல் முறையீடு செய்யும் வகையில் அவருக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார். ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையவர் என்பதும், ஒய்வு பெறும் சில நாட்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.