இராசிபுரம் பகுதிகளில் பலத்த மழை: தாழ்வான பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்
இராசிபும் பகுதியில் பலத்த மழை வெளுத்து வாங்கியதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது.;
இராசிபுரம் நகரில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதியில் உள்ள ரோடுகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களாக பரவலமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், இராசிபுரம், சேந்தமங்கலம் மற்றும் கொல்லிமலை பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை இராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி- மின்னலுடம் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இராசிபுரம் நகரில் கடந்த 24 மணி நேரத்தில், 41.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, பட்டணம், வடுகம், புதுப்பாளையம், வெண்ணந்தூர், குருசாமிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.