கிணற்றுக்குள் விழுந்த மாட்டை மீட்க முயன்ற விவசாயி நீரில் மூழ்கி பலி
இராசிபுரம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மாட்டை மீட்க முயன்ற விவசாயி, நீரில் மூழ்கி உயிரிந்தார்.
இராசிபும் தாலுக்கா, வெண்ணந்தூர் அருகே செம்மாண்டப்பட்டி பஞ்சாயத்து, காணம்பாளையத்தைச் சேர்ந்தவர் சீரங்கன் (70), விவசாயி. இவருடைய மனைவி ராசம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், சீரங்கன் திடீரென்று காணாமல் போனார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. அடுத்து நாள் காலை அதே கிராமத்தில் உள்ள காவேரி என்வரின் விவசாய கிணற்றில் ஒரு பசுமாடு இறந்த மிதப்பாக தகவல் பரவியது.
இது குறித்து தகவல் கிடைத்ததும், இராசிபுரம் நிலைய தீயணைப்பு அலுவலர் ஏழுமலை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்தனர். மொத்தம் 50 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்தது. இதையடுத்து கயிற்றை கட்டி கிணற்றில், இறந்து கிடந்த பசு மாட்டின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இறந்த மாடு காணாமல் போன சீரங்கனுக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரிந்தது.
அப்போது கிணற்றின் மற்றொரு பகுதியில் செருப்பு மிதந்தது. சந்தேகம் அடைந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கி தேடிப்பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் சீரங்கனின் இறந்த உடலை கைப்பற்றி மேலே கொண்டு வந்தனர். தகவலின் பேரில் வெண்ணந்தூர் போலீசார், சீரங்கனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கிணற்றுக்கு அருகே, சீரங்கன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது பசு தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளது, அதனைக் காப்பாற்ற முயன்ற சீரங்கன் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.