இராசிபுரத்தில் பாதாள சாக்கடைக்கு தோண்டிய சாலைகளை சீரமைக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை

இராசிபுரத்தில் பாதாள சாக்கடை அமைக்க தோண்டிய சாலைகளை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2021-09-06 09:30 GMT

பைல் படம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது மாநாடு இராசிபுரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கண்ணன் தலைமை வகித்தார். சிந்து முன்னிலை வகித்தார். முன்னதாக கட்சியின் மூத்த தலைவர் ராஜகோபால் கொடியேற்றினார். பிரதேச குழு செயலாளர் செல்வராசு மாநாட்டை துவக்கிவைத்தார். கிளைச் செயலாளர் சண்முகம் வரவு, செலவு அறிக்கை படித்தார்.

இந்த மாநாட்டில் இராசிபுரம் பழைய பஸ் சேமமடைந்துள்ள அனைத்து நகராட்சி கடைகளையும் இடித்துவிட்டு, நகராட்சி திருமண மண்டபம் கட்டித்தர வேண்டும். ராசிபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியை மேம்படுத்தி, கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும். மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்.

சுதந்திரப் போராட்டத் தியாகி டாக்டர் வரதராஜுலு நாயுடுவுக்கு ராசிபுரத்தில் மணி மண்டபம் கட்ட வேண்டும். பாதாள சாக்கடைத் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட, நகரில் உள்ள அனைத்து சாலைகளையும், தெருக்களையும் உடனடியாக செப்பனிட வேண்டும். கோனேரிப்பட்டி ஏரி, தட்டாங்குளம் ஏரிகளுக்கு வரும் நகராட்சி கழிவுநீரை சுத்திகரித்து ஏரிகளில் விட வேண்டும்.

நகராட்சி பொதுக் கழிப்பிடங்களை சுகாதாரமாக பராமரிக்க, கூடுதலாக நகராட்சி துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். நகரில் வாரம் இருமுறை காவிரி குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் சிபிஐஎம் நகர கிளை இரண்டாக பிரிக்கப்பட்டு, வடக்கு கிளைக்கு சண்முகம் செயலாளராகவும், தெற்கு கிளைக்கு கண்ணன் செயலாளராகவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் கந்தசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ரங்கசாமி, ராணி மற்றும் தர்மலிங்கம் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News