இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பருத்தி ஏலம்
ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது.;
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்க (ஆர்சிஎம்எஸ்) கிளை அலுவலக வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. ராசிபுரம், வெண்ணந்தூர், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கப்பட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விசவாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர்.
திருச்செங்கோடு, ஈரோடு, பல்லடம் கோவை, திருப்பூர், ஆத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். 127 பருத்தி மூட்டைகள் ரூ.4 லட்சத்திற்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
ஏலத்தில், ஆர்.சி.எச் ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.10,430-க்கும், அதிகபட்சமாக ரூ.12,700-க்கும், டி.சி.எச் ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.10,270 முதல் அதிகபட்சமாக ரூ.11,269-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5,700 முதல் அதிகபட்சம் ரூ.6,200-க்கும் ஏலத்தில் விலை போனது.