வெண்ணந்தூர் முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் மதிவேந்தன்
இராசிபுரம் அருகே வெண்ணந்தூரில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில், அமைச்சர் மதிவேந்தன் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
தமிழக அரசின் சார்பில், இன்று மாநிலம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 700 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, காலை 7 மணி முதல், இரவு 7 மணிவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இராசிபுரம் தாலுக்கா வெண்ணந்தூர் ஒன்றியம், மசக்காளிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாம் துவக்க விழாவிற்கு, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், முகாமை துவக்கி வைத்து தனக்கு இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.