ராசிபுரம் அருகே குடிநீர் பம்பு அகற்றாமல் கான்கிரீட் அமைப்பு: ஒப்பந்தம் ரத்து

ராசிபுரம் அருகே பயன்படாத கைப்பம்பை அகற்றாமல், கான்கிரீட் தளம் அமைத்தவரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

Update: 2022-08-23 01:15 GMT

பட்டணம் முனியப்பம்பாளையத்தில், பயன்படாத கைப்பம்பை அகற்றாமல், கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம் முனியப்பன்பாளையம் கிராமத்தில், 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாக்கடை கால்வாயின் மேல் பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வந்தது. அங்குள்ள இந்திரா காலனி பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும்போது ரோட்டோரம் ஏற்கனவே சில ஆண்டுகளாக பயன்படாத நிலையில் இருந்து வந்த போர்வெல் கைப்பம்பை அகற்றாமல் அவசர கதியில் கான்கிரீட் போடப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கான்ட்ராக்டரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் சரியான பதில் அளிக்காததால், அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இதையொட்டி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், ராசிபுரம் பிடிஓ வனிதா, ஒன்றிய பொறியாளர் நைனாமலை ராஜ் ஆகியோர் இந்திரா காலனிக்கு சென்று, கைப்பம்பை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பிறகு கான்கிரீட் அமைக்கப்பட்ட இடத்தில் இருந்த கைப்பம்பு அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கான்கிரீட் அமைக்கும் பணியை டெண்டர் எடுத்தவரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News