இராசிபுரம் அருகே பழங்குடியினர் பள்ளியில் உணவை அருந்தி ஆய்வு செய்த கலெக்டர்
இராசிபுரம் அருகே பள்ளி, கல்லூரிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
இராசிபுரம் அருகே முள்ளுகுறிச்சியில், அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவர் பள்ளியில் அரசு அறிவித்துள்ள கொரோனா வழகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பள்ளியில் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதிகள் குறித்து பார்வையிட்டார். தொடர்ந்து அவர், விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார். உணவு பட்டியல் படி மாணவர்களுக்கு சுகாதாரமாக சமைத்து உணவுகள் வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் மாணவர்களின் உடல்நிலையையும் தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டார்.
பின்னர், மெட்டாலாவில் உள்ள தனியார் கல்லூரியில் கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஆய்வின்போது நாமக்கல் சப்கலெக்டர் கோட்டைக்குமார், ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், நாமகிரிப்பேட்டை பிடிஓ சரவணன் மற்றும் சுந்தரம் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.