இராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

இராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டு ரூ.32 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-10-30 00:30 GMT

இராசிபுரம் தீயணைப்பு நிலையம்

இராசிபுரம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க,  அரசு விதிமுறைகளுடன் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது. பட்டாசு கடைகள் அமைக்க தீயணைப்பு துறையினரிடம் பாதுகாப்பு குறித்த தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

இதனையடுத்து பட்டாசு கடைகள் வைக்க ராசிபுரம் தீயணைப்பு துறை அலுவலர்கள் லஞ்சம் கேட்டதாக புகார்கள் கூறப்பட்டது. இது குறித்து புகாரின் அடிப்படையில் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி., ராமசந்திரன், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் 5 பேர் கொண்ட தனி படையினர் திடீரென ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் சோதனை நடத்தினர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் கரிகாலன், உதவி அலுவலர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் தீயணைப்பு நிலையத்தில் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரொக்கம் சுமார் ரூ.32 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் சுமார் ரூ.2.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குறிப்பு எழுதப்பட்டிருந்த நோட்டும் கைப்பற்றப்பட்டது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News