நாமக்கல் மாவட்டத்தில் 45 மருத்துவ முகாம்கள் -அமைச்சர் மதிவேந்தன் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வருமுன் காப்போம்திட்டத்தில் 45 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் -அமைச்சர் மதிவேந்தன் தகவல்.;

Update: 2021-10-14 03:00 GMT

ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பட்டியில் நடைபெற்ற வருமுன் காப்போம் மருத்துவ முகாமில், சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்.பி ராஜேஷ்குமார் ஆகியோர்.

நாமக்கல் மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்டத்தில் 45 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கூறினார்.

இராசிபுரம் தாலுக்கா, ஆர்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட முகாம், கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்றது. எம்.பி ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் முகாமை துவக்கி வைத்து, பள்ளி மாணவ மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு முழுவதும், தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 1,250 மருத்துவ முகாம்கள் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 3 முகாம்கள் வீதம் 45 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. பொதுமக்கள் வாழும் இடங்களுக்கே சென்று நடத்தப்படும் வருமுன் காப்போம் திட்ட முகாமில் பொதுமக்களுக்கு குழந்தை நலம், பல் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதய நோய் சிகிச்சை, நீரிழிவு நோய் கண்டுபிடிப்பு, புற்றுநோய். காசநோய், மகப்பேறு மருத்துவம், சித்த மற்றும் இந்திய மருத்துவம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, உயர்தர பரிசோதனை கருவிகள் மூலம் சோதணைகள் செய்து மருத்துவ ஆலோசனை வழங்குவதுடன், நோயைக் கண்டறிந்து, தேவைப்படுவோர்க்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட உயர் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.

வருமுன் காப்போம் திட்ட முகாமில் கலந்து கொண்ட 732 பேருக்கு உடல் எடை, உயரம் ஆகியவை அளக்கப்பட்டு ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டது. 42 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, 5 பேருக்கு கேட்ராக்ட் ஆபரேசன் செய்ய பரிந்துரை வழங்கப்பட்டது. அதிநவீன எக்ஸ்ரே கருவி மூலம் 22 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனையும், கர்ப்பிணித்தாய்மார்கள் 94 பேருக்கு ஸ்கேன் பரிசோதனையும், 106 பேருக்கு சர்க்கரை அளவு பரிசோதணையும், இசிஜி பரிசோதணைகளும் மேற்கொள்ளப்பட்டன.

நிகழ்ச்சியில் இராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஜெகநாதன், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரபாகரன், காசநோய் துணை இயக்குநர் கணபதி, பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News