40 ஆடுகளுடன் வெள்ளத்தில் சிக்கித்தவித்த தொழிலாளி: தீயைணப்புத் துறையினர் மீட்பு
பிலிக்கல்பாளையம் அருகே காவிரி ஆற்றின் நடுவே சிக்கிக்கொண்ட தொழிலாளி மற்றும் 40 க்கும் மேற்பட்ட ஆடுகளை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நல்லாக்கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (55). கூலித் தொழிலாளி. இவர் பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றின் நடுவே உள்ள மேய்ச்சல் தரை பகுதிக்கு ஆடுகளை ஓட்டிச் சென்று மேய்த்துவிட்டு, மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.
சம்பவத்தன்று காலை லட்சமணன் தனக்கு சொந்தமான 40 ஆடுகளை பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றின் உட்பகுதியில் உள்ள மேய்ச்சல் தரைக்கு ஓட்டிச்சென்று மேய்த்துக் கொண்டிருந்தார். மாலை நேரத்தில் திடீரென ஆற்றில் வெள்ளப்பபெருக்கு ஏற்பட்ட அதிக அளவில் தண்ணீர் வந்தது. இதனால் லட்சுமணனன் ஆடுகளுடன் காவிரி ஆற்றின் நடுவில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.
இதனால் தன்னையும், ஆடுகளையும் காப்பாற்றுமாறு லட்சுமணன் சத்தம் போட்டுள்ளார். இதைப் பார்த்த காவிரி கரையில் இருந்தவர்கள் ஜேடர்பாளையம் போலீசாருக்கும், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையொட்டி வேலாயுதம்பாளையம் நிலைய தீயணைப்பு அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து, காவிரி ஆற்றில் சிக்கித் தவித்த லட்சுமணன் மற்றும் அவரது 40-க்கும் மேற்பட்ட ஆடுகளை பத்திரமாக மீட்டு கரை சேர்ந்தனர். தீயணைப்புத்துறையின் சேவையை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள்.