ராஜா வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

ஜேடர்பாளையம் அருகே ராஜாவாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-31 02:45 GMT

பைல் படம்.

பரமத்திவேலூர் தாலுக்கா ஜேடர்பாளையம் அருகே உள்ள ஆனங்கூரில் காவிரி பாசன ராஜா வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் மதகின் கீழ் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் ஜேடர்பாளையம் அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அண்ணாதுரை (52) என்பது தெரியவந்தது.

சம்பவத்தன்று ஆனங்கூர் ராஜா வாய்க்கால், தண்ணீர் திறந்து விடும் மதகின் மேல் அமர்ந்து மது குடித்தபோது, அண்ணாதுரை தவறி, வாய்க்காலுக்குள் விழுந்து இறந்துள்ளார் என்பது போலீசார் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News