சார்ஜ் போடும்போது 'ஷாக்' : பரமத்திவேலூர் அருகே வடமாநில தொழிலாளி பலி
பரமத்தி வேலூர் அருகே, செல்போன் சார்ஜ் போடும்போது ஷாக் அடித்ததால், வட மாநில தொழிலாளி உயிரிழந்தார்.
பீகார் மாநிலம் மொகில்சிபூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சை குமார் (20). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே, சுண்டபனை கிராமத்தில் உள்ள தனியார் அட்டை தயாரிப்பு தொழிற்சாலையில் தங்கி, வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு, தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது தனது செல்போனை அங்குள்ள மின்சார பிளக்கில் சார்ஜர் போட்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு பிளக்கில் இருந்து செல்போனை எடுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ரஞ்சை குமாரை மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை, மில்லில் வேலைபார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீட்டு பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.