மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி: ஜேடர்பாளையம் அரசு பள்ளி மாணவியர் சாதனை
மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில், ஜேடர்பாளையம் அரசு மகளிர் பள்ளி அணியினர், முதலிடம் பெற்று கோப்பையை வென்றனர்.;
மாநில அளவிலான மகளிர் கபடி போட்டியில், ஜேடர்பாளையம் அரசு மகளிர் பள்ளி அணியினர், முதலிடம் பெற்று கோப்பையை வென்றனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த மேலப்பேட்டப்பாளையத்தில், சதீஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் பெண்கள் பிரிவில், சென்னை, திண்டுக்கல், கடலூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. அதில், ப.வேலூர் தாலுக்கா, ஜேடர்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியரின், பல்லவன் கபடி குழு சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெற்று மாநில அளவில் சாதனை படைத்தது. இக்குழுவினருக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
இப்பள்ளி மாணவி மதினா பேகம் தலைமையிலான அணியினர், இறுதிப்போட்டியில், திருவண்ணாமலை மாவட்டம் பீனிக் பறவை அணிக்கு எதிரான போட்டியில் 40க்கு 20 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற கபடி குழுவினரான கும்பேஸ்வரி, சத்தியவாணி, ஸ்வேதா, உஷா, ரஞ்சனி, சஞ்சீவினி, தேவிஸ்ரீ ஆகியோரை, பள்ளி தலைமையாசிரியர் பழனிசாமி பாராட்டி கோப்பை வழங்கினார். மேலும், ஆசிரியர்கள் மலர்கண்ணன், சிவக்குமார் ஆகியோர் பாராட்டினர்.