பரமத்திவேலூரில் மாநில கிரிக்கெட் போட்டி: கோப்பையை வென்ற நாமக்கல் மாவட்ட அணி
பரமத்திவேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், நாமக்கல் மாவட்ட அணி முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது.;
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் கந்தசாமிகண்டர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வேலூர் பிரண்ட்ஸ் மற்றும் லீவ்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பாக மாநில அளவிலான 41வது ஆண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 28 மாவட்ட அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இறுதிப்போட்டியில் நாமக்கல் மாவட்ட அணியும், ஈரோடு மாவட்ட அணியும் மோதினர். நாமக்கல் மாவட்டத்திற்காக சிறப்பாக விளையாடிய டாக்டர் சைலேந்திரபாபு அகாடமியின் தில்லை கிரிக்கெட் அணி ஈரோடு மொடக்குறிச்சி அணியை வென்று முதலிடம் பெற்றது.
அந்த அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம்மற்றும் சக்திவேல் நினைவு கோப்பையை சந்தானலட்சுமி பிரபு, அபித் அப்துல்ரசாக் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் வழங்கினார்கள். தொடர் ஆட்ட நாயகன் மற்றும் சிறந்த பந்து வீச்சாளர் விருதினை சைலேந்திரபாபு அணியின் கவுதம் பெற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக அரிமா சங்க பிரமுகர் கண்ணன், வக்கீல் சசிக்குமார், வைரமணி, டால்பின் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை லீவ்ஸ் கிரிக்கெட் கிளப் அணித்தலைவர் கதிர் திரைப்பட இயக்குனர் தினேஷ் தங்கவேல் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.