பரமத்தி அருகே பதுக்கி வைக்கப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பரமத்தி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை பேரீசார் பறிமுதல் செய்தனர்.;
பைல் படம்.
சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் எஸ்.ஐ. அகிலன், எஸ்.எஸ்.ஐ.க்கள் சத்தியபிரபு, செல்வராஜ் ஆகியோர் பரமத்தி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பரமத்திவேலூர் அருகே உள்ள ஒழுகூர்பட்டி பகவதி அம்மன் கோயில் பின்புறம் விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியில் ரேசன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று சோதனை செய்தபோது, 24 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி, கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையொட்டி, ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை ஏற்றிச் செல்ல அங்கு நிறுத்தப்பட்டிருந்த மொபட்டையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ரேசன் அரிசியை கடத்தி வந்து பதுக்கியது, இருக்கூர் அருகே உள்ள பஞ்சப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பது தெரியவந்தது. அவர் மீது குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.