பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்திவேலூர் வட்டாரத்தில், மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-05-08 05:30 GMT

பைல் படம்.

பரமத்திவேலூர் வட்டாரத்தைச் சேர்ந்த பரமத்தி, பொத்தனூர், எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, கூடச்சேரி, கபிலர்மலை, ஜேடபர்பாளையம், சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர்.

இந்த பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி செல்லப்பம்பட்டி, புதன்சந்தை, புதுச்சத்திரம், மலைவேப்பங்குட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் சேகோ ஆலை உரிமையாளர்கள் அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனையானது. இந்த வாரம் டன் ஒன்று ரூ.1,000 வரை உயர்ந்து ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனையானது.

ஆனால் இந்த வாரம் டன் ஒன்று ரூ.2 ஆயிரம வரை உயர்ந்து ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கு வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். விலை உயர்வால் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News