வார்டு மறுவரையறையைக் கண்டித்து ப.வேலூரில் பொதுமக்கள் சாலை மறியல்

வார்டு மறுவரையறை செய்யப்பட்டதை கண்டித்து, பரமத்திவேலூர் டவுன் பஞ்சாயத்து பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-03 03:00 GMT

நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில், வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில், சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து வார்டுகளிலும் மறுவரையறை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் பரமத்திவேலூர் டவுன் பஞ்சாயத்து, 3-வது வார்டு பகுதியில் இருந்த கோவில் காடு மற்றும் ராஜா நகர் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உழவர்பட்டி பகுதி 2-வது வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் உழவர்பட்டிக்கும், குப்புச்சிபாளையம் கோவில் காடு மற்றும் ராஜா நகர் பகுதிக்கு இடையே சுமார் 2 கி.மீட்டர் தூரம் இருப்பதால் கோவில்காடு, ராஜா நகர் பகுதியை 5-வது வார்டுடன் இணைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மனு அனுப்பினர். இதனை ஆய்வு செய்த பேரூராட்சி உதவி இயக்குனர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். ஆனால் மறுசீரமைப்பு முடிவுகளில் எவ்வித மாற்றமும் செய்யாத நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குப்புச்சிபாளையம் கோவில் காடு மற்றும் ராஜா நகர் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள வார்டு மறுவரையை கண்டித்தும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து தங்களது வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் திரும்ப ஒப்படைக்க போவதாகவும் அறிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன், இன்ஸ்பெக்டர் வீரம்மாள் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடையாத அப்பகுதி பொதுமக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி உதவி இயக்குனர் தங்களிடம் கூறியதை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது, திடீரென்று பொதுமக்கள், பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் ரோட்டில் அமர்ந்து சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்திவேலூர் போலீஸ் டிஎஸ்பி ராஜாரணவிரன் மற்றும் தாசில்தார் கண்ணன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். சாலை மறியலால் அப்பகுதிகளில் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News