பாலப்பட்டி அரசு பள்ளியில் சுகாதார வசதி இல்லாததை கண்டித்து போராட்டம்

பாலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு சுகதார வசதி இல்லாததைக் கண்டித்து, பெற்றோர்கள் தலைமை ஆசிரியரின் அறையை முற்றுகையிட்டு போராட்டம்.

Update: 2022-08-27 09:15 GMT

பாலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பெற்றோர்கள் தலைமை ஆசிரியரின் அறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுக்கா, பாலப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சுகாதார வசதி இல்லாததை கண்டித்து, பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரிடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர். இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக வந்த 50-க்கும் மேற்பட்ட பெற்றோர் திடீரென தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று அவரை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவ, மாணவிகளின் கழிப்பறைகளை சீரமைத்து, தண்ணீர் வசதி செய்வதுடன் அடிப்படை சுகாதார வசதிகளை நிறைவேற்ற வேண்டும். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை ஆசிரியர் பெரியசாமி உறுதி அளித்தார். இதனால் சமாதானம் அடைந்த பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News