பெரியசோளிபாளையம் பொன்காளியம்மன் கோயில் கும்பாபிசேக விழா
கபிலர்மலை அருகே உள்ள பெரியசோளிபாளயைம் பொன்காளியம்மன் கோயிலில் கும்பாபிசேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர் தாலுக்கா, கபிலர்மலை அருகே உள்ள பெரியசோளிபாளையத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பொன்காளியம்மன் திருக்கோயில் கோவில் உள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 6-ந் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை 10 மணிக்கு மேல் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.
தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 8ம் தேதி காலை யாகசாலை பூஜைகள் மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்று, புனித நீர் கலசங்கள் கோயில் கோபுரங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீரை பொன்காளியம்மன், விநாயகர் கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிசேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவருக்கு கும்பாபிசேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பெரியசோளிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.