தொழில் நஷ்டத்தால் தற்கொலை: ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்

பரமத்திவேலூரில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த தொழிலதிபர், குடும்பத்துடன் விஷம் குடித்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.;

Update: 2021-10-27 07:00 GMT

சையத் அக்பர்

பரமத்தி வேலூர், சுல்தான்பேட்டை, சேடர் தெருவைச் சேர்ந்தவர் சையத் அக்பர் (60). சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் டிராக்டர் டிரெய்லர் தயாரிக்கும் பட்டறை நடத்தி வந்தார். பின்னர் அதை விட்டு வெங்காய மண்டி வைத்து நடத்தி வந்தார். அவருக்கு பாத்திமாபேகம் (55) என்ற மனைவியும், சிக்கந்தர் (33), பர்கத் (30) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். சிக்கந்தர் தற்போது லண்டனில் வேலை செய்து வருகிறார். பர்கத் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, சையத் அக்பர் மன உளைச்சலுடன் காணப்பட்டார். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். கடந்த 4 ஆம் தேதி இரவு,  குளிர்பானத்தில் விஷம் கலந்து மனைவி பாத்திமா, மகன் பர்கத் ஆகியோருக்கு கொடுத்து விட்டு தானும் குடித்தார். தகவல் அறிந்த அவரது உறவினர்களும், அருகில் இருந்தவர்களும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இவர்களில் பாத்திமாபேகம், மகன் பர்கத் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி ஏற்கனவே உயிரிழந்தனர். சையத்அக்பர் மட்டும் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, பின்னர், வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். தொழில் நெருக்கடியால், கணவன், மனைவி, மகன் ஆகியோர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு சம்பவம்,  அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமத்தி வேலூர் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News