பரமத்திவேலூர் பகுதியில் பூக்கள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
ஆடி மாதத்தை முன்னிட்டு, பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆடி மாதத்தை முன்னிட்டு, பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்த்துள்ளதால் மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர், பாலப்பட்டி, மோகனூர், பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு வகையான மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். தோட்டங்களில் விளையும் பூக்களை விவசாயிகள் தினசரி பரமத்திவேலூரில் நடைபெறும் பூ மார்க்கெட் ஏலச்சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.
வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பூக்களை வாங்கிச்செல்கின்றனர்.
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டள்ளதாலும், ஆடி மாதம் என்பதால் பல கோயில்களில் தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பூக்களுக்கான தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து வருகிறது.
ப.வேலூர் மார்க்கெட்டில் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி ஒரு கிலோ ரூ. 200-க்கும், சம்பங்கி ரூ. 90-க்கும், அரளி ரூ. 100-க்கும், ரோஜா ரூ. 180-க்கும், முல்லை ரூ. 190-க்கும், செவ்வந்தி ரூ. 200-க்கும் ஏலம் போனது. பூக்களின் விலை உயர்வால் மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.