பொத்தனூர் அருகே மர்மமான முறையில் இளைஞர் சாவு: போலீஸ் விசாரணை
பொத்தனூரில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர், தேவராய சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவரது வீட்டு முன் கார் நிறுத்துவது தொடர்பாக, மணிகண்டனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், ரவி, குமார் ஆகியோருடன் ஏற்கனவே தகராறு இருந்து வந்தது.
சம்பவத்தன்று இரவு, அவருக்கும் ரமேஷ், ரவி, குமார் ஆகியோருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மூவரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கிவிட்டு சென்றுவிட்டனர். அடுத்த நாள் காலை, நீண்ட நேரம் ஆகியும், மணிகண்டன் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, தூக்கில் தொங்கிய நிலையில் மணிகண்டன் இறந்து கிடந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தலைமறைவான ரமேஷ், ரவி, குமார் ஆகிய மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.