மோகனூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணி - ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனர் சரவணன், மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-06-26 04:13 GMT

மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய அலுவலகள் கட்டுமானப்பணி ரூ.2 கோடியோ 93 லட்சத்து 85ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. அலுவலக கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட அவர், கட்டிடத்தின் வேலைப்பாடுகள், கட்டுமான பொருட்களின் தரம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

கட்டிடத்தை முழுமையாக பார்வையிட்ட அவர், விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களை வலியுறுத்தினார்.. பின்னர், வள்ளிபுரம்-பாலப்பட்டி ரோடு, குட்லாம்பாறை, ஆரியூர், எஸ்.வாழவந்தி ரோடு, அய்யம்பாளையம் – நொச்சிபட்டி வழியாக, பாரத பிரதமர் கிராம சதக் யோஜனா திட்டத்தின் மூலம், ரூ.2 கோடியே, 28 லட்சத்து, 64 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளை ஆய்வு செய்தார்.

அருர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும், உயர்மட்ட குடிநீர் தேக்கத்தொட்டி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் சார்பில், அருர் புறம்போக்கு நிலத்தில், 1,000 மரக்கன்றுகள் நட்டு, அடர்வனம் அமைத்து பராமரித்து வரும் பணிகளையும், ஊராட்சி கூடுதல் இயக்குனர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மண்டல துணை பி.டி.ஓ. கனகராஜ், பி.டி.ஓ.க்கள் தேன்மொழி, முனியப்பன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News