பள்ளி மாணவியை கடத்திய கட்டட மேஸ்திரி போக்சோவில் கைது
திருமண ஆசை கூறி பள்ளி மாணவியை கடத்திய கட்டட மேஸ்திரி போக்சோவில் கைது
பரமத்திவேலூர் தாலுக்கா, கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. மாணவியை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் தங்களது மகளை கண்டுபிடித்து தரக்கோரி நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மாயமான மாணவியைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மணிவாசகம் ( 25) என்பவர் கடந்தஒரு ஆண்டுக்கும் மேலாக கந்தம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து, கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது மணிவாசகத்துக்கும், பிளஸ்-2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவியிடம் திருமண ஆசைவார்த்தை கூறிய அவர் மாணவியை கடத்தி சென்று, திருப்பூரில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து நல்லூர் போலீசார் திருப்பூர் சென்று மாணவியை மீட்டனர். பள்ளி மாணவியை திருமண ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற மணிவாசகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மாணவி காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.