தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்திய மனைவி கொலை: கணவர் கைது

பரமத்திவேலூர் அருகே, தனிக்குடித்தனம் போக வற்புறுத்திய மனைவியை கொலை செய்த பேக்கரி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-10 06:00 GMT

பரமத்திவேலூர் தாலுக்கா, பொத்தனூர் பாப்பாத்தியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மகன் கபிலேஷ்ராஜன் (27). இவருக்கும் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த சீனிவாசன் மகள் சர்மிளாதேவிக்கும்  2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 8 மாத குழந்தை சஜாஜோனிகாவுடன் பொத்தனூரில் தாய் சுசீலா, சகோதரியுடன் வசித்து வந்தனர். கபிலேஷ்ராஜன் கரூரில் பேக்கரி நடத்தி வந்தார்.

இந்நிலையில்,  கடந்த 6-ந் தேதி கையில் காயங்களுடன் மயங்கி கிடந்த சர்மிளாதேவியை, கபிலேஷ்ராஜனின் தாய் சுசீலா மீட்டு, ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார்.  அவரை பரிசோதனை செய்த டாக்டர், சர்மிளாதேவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, பரமத்திவேலூர் போலீசில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக சீனிவாசன் புகார் அளித்தார். அதன்பேரில் டிஎஸ்பி ராஜாரணவீரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து கபிலேஷ்ராஜனிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததும், இதனால் சர்மிளாதேவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டதும் தெரிய வந்தது.  இதையடுத்து கபிலேஷ்ராஜன் கடந்த மாதம் 26-ந் தேதி மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார். கடந்த 5-ந் தேதி கரூரில் உள்ள பேக்கரிக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தபோது சர்மிளாதேவி தனிக்குடித்தனம் போக வேண்டும் என கூறி வற்புறுத்தியதாக தெரிகிறது.

ஆனால், கபிலேஷ்ராஜன் மறுக்கவே, மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கபிலேஷ்ராஜன் மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார். சம்பவத்தன்று அதிகாலை,  தூங்கிக் கொண்டிருந்த சர்மிளாதேவியை, கபிலேஷ்ராஜன் தலையணையால் முகத்தில் வைத்து அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் மனைவியின் செல்போனை எடுத்து தனிக்குடித்தனம் போகவில்லை என்றால் நான் செத்துவிடுவேன் என்று அவரே டைப் செய்து அதை தனது செல்போனுக்கு அனுப்பி விட்டு, கரூருக்கு சென்று விட்டார். பின்னர் சுசீலா, மேலே சென்று பார்த்தபோது ரத்தக்காயங்களுடன் சர்மிளாதேவி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கபிலேஷ்ராஜனை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News