கபிலர்மலை ஒன்றிய வளர்ச்சிப்பணி: நாமக்கல் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரமத்தி டவுன் பஞ்சாயத்து, ஓவியம்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடும்பன்குளத்தை, பரமத்திவேலூர் எம்எல்ஏசேகர் முன்னிலையில் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பரமத்தி வேலூர் தாலுக்கா எஸ்.கொந்தளம் விஏஓ அலுவலகத்திற்கு சென்ற கலெக்டர், அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளைப் பார்வையிட்டார். கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், எஸ்.கொந்தளம் அரசு உயர்நிலைப்பள்ளி பகுதிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணியாளர்களின் வருகை எண்ணிக்கையை கலெக்டர் பார்வையிட்டார்.
நாமக்கல் செல்லும் வழியில் பொத்தனூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில் அனுமதியின்றி கருங்கல் ஏற்றிச்சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்திய கலெக்டர், அதை பறிமுதல் செய்து வழக்கு, பதிவு செய்ய தாசில்தாருக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வுகளில் பரமத்தி வேலூர் தாசில்தார் அப்பன்ராஜ், கபிலர்மலை பிடிஓக்கள் டேவிட் அமல்ராஜ், ஜெயக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.