சர்வதேச சேம்பியன்ஷிப் போட்டி: பரமத்திவேலூர் மாணவ, மாணவிகள் தங்கம் வென்று சாதனை

பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்த 7 மாணவ, மாணவிகள் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

Update: 2021-09-27 02:36 GMT

நேபாள நாட்டின், புக்காரா நகரில் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பொத்தனூர், மற்றும் பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் சிலம்பம், குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

14 வயதுக்கு உள்பட்ட சிலம்பம் தனித்திறமை போட்டியில் 35 - 40 கிலோ எடைப் பிரிவில் மாணவி ரம்யா தங்கப் பதக்கம் பெற்றார். சிலம்பப்போட்டி 45-50 கிலோ எடைப் பிரிவில் மாணவி இனியா தங்கப் பதக்கம், 14 வயதுக்கு உள்பட்ட தொடுமுறை போட்டியில் 55- 60 கிலோ எடைப் பிரிவில் மாணவி ஜெயஸ்ரீ தங்கப் பதக்கம், 17 வயதுக்கு உள்பட்ட 60- 65 கிலோ எடை பிரிவில் மாணவி ஹேமலதா தங்கப் பதக்கம் வென்றனர்.

15 வயதுக்கு உள்பட்ட குத்துச்சண்டை போட்டியில் 40-45 கிலோ எடைப் பிரிவில் மாணவி ஹேமாவதி தங்கப் பதக்கம், 14 வயதுக்கு உள்பட்ட 35-40 கிலோ எடைப்பிரிவில் மாணவர் கிஷோர் தங்கப் பதக்கம், டேக்-வாண்டோ போட்டியில் 15 வயதுக்கு உள்பட்டோர் 40 -45 கிலோ எடைப் பிரிவில் மாணவி கோபிகா தங்கப் பதக்கம் பெற்றனர்.

குத்துச்சண்டை போட்டியில் 17 வயதுக்கு உள்பட்ட 45-50 கிலோ எடைப்பிரிவில் மாணவி தாட்சாயணி இரண்டாம் இடத்தைப் பெற்றார். தங்கப் பதக்கங்களை வென்று பரமத்திவேலூர் திரும்பிய மாணவ, மாணவிகள், பயிற்சியாளர் ரவிக்குமார் ஆகியோரை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினார். 

Tags:    

Similar News