ப.வேலூரில் பூக்கள் விலை உயர்வு:1 கிலோ குண்டு மல்லி ரூ.2,300
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2,300க்கு விற்பனையானது.
பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தோட்டங்களில் விளையும் மலர்களை அவர்கள், தினசரி ப.வேலூரில் உள்ள ஏல மார்க்கெட்டில் கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர்.
வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பூ வியாபாரிகள் மார்க்கெட்டிற்கு வந்து ஏலம் மூலம் மலர்களை கொள்முதல் செய்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.1,000, சம்பங்கி கிலோ ரூ.50, அரளிப்பூ ரூ.150, ரோஜாப்பூ ரூ.150-க்கும், முல்லைப் பூ ரூ.1,00, செவ்வந்திப்பூ ரூ.100 என்ற விலையில் ஏலம் போனது.
தற்போது பொங்கல் பண்டிகை துவங்கியுள்ளதால், நேற்று நடைபெற்ற மலர்கள் ஏலத்தில் ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.2,300க்கும் ஏலம் போனது. சம்பங்கி கிலோ ரூ.120, அரளிப்பூ கிலோ ரூ.350, ரோஜாப்பூ கிலோ ரூ.250, முல்லைப்பூ ரூ.2,000ர, செவ்வந்திப்பூ ரூ.200 என்ற விலையில் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்வால் மலர் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.