பூனை மீட்க கிணற்றில் குதித்த விவசாயி: இரு உயிர்களும் பத்திரமாக மீட்பு
கிணற்றில் விழுந்த பூனையை மீட்க கிணற்றில் குதித்த விவசாயியை தீயைணப்பு படையினர் மீட்டனர்.;
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள தெற்கு நல்லியாம்பாளை யத்தை சேர்ந்தவர் லோகநாதன் (42). விவசாயி. இவர் தனது வீட்டில் பூனை ஒன்றை செல்லமாக வளர்த்து வருகிறார். இந்த பூனை சம்பவத்தன்று இரவு விவசாயி வீட்டின் அருகே இருந்த, கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது.
இதனை பார்த்த லோகநாதன், பூனையை மீட்க கிணற்றில் குதித்தார். பூனையை காப்பாற்றிய அவரால் கிணற்றில் இருந்து வெளியே வரமுடியவில்லை. இதனால் பூனையுடன் அவர் 20 அடி ஆழத்தில் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார்.
இச்சம்பவம் குறித்து, அங்கிருந்தவர்கள் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, கயிறு கட்டி பூனை மற்றும் லோகநாதனை பத்திரமாக மீட்டனர்.