பிலிக்கல்பாளையம் ஏலச்சந்தையில் வெல்லம் விலை சரிவு: விவசாயிகள் கவலை
பிலிக்கல்பாளையம் ஏலச்சந்தையில் வெல்லம் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள, ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.
இப்பகுதிகளில் விளையும் கரும்பை வெல்ல ஆலை உரிமையாளர்கள் வாங்கிச்சென்று உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை போன்றவற்றைத் தயார் செய்கின்றனர். அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாகக் கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுசெல்கின்றனர்.
வாரம்தோறும் புதன்கிழமை, சனிக்கிழமைகளில் நடைபெறும் இந்த ஏலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் வியபாரிகள், ஏலத்தின் மூலம் தேவையான வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரையை கொள்முதல் செய்து செல்கின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 5,000 உருண்டை வெல்ல சிப்பங்களும், 3,000 அச்சு வெல்ல சிப்பங்களும் ஏலத்திற்கு வந்தன. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,300 வரையிலும் ஏலம் போனது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 8,700 உருண்டை வெல்ல சிப்பங்களும், 3,800 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லச் சிப்பம் ஒன்றுக்கு ரூ.1,150 வரையிலும், அச்சு வெல்லச் சிப்பம் ஒன்று ரூ.1,120 வரையிலும் ஏலம் போனது.
வெல்லம் வரத்து அதிகரித்ததால் விலை சரிவடைந்துள்ளதாக வெல்ல உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். வெல்லம் விலை சரிவால், கரும்பு விலையும் சரிவடையும் அபாயம் உள்ளதாக கரும்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.