பரமத்தி வேலூர் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல்: திமுக போட்டி வேட்பாளர் வெற்றி

பரமத்திவேலூர் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தலில் 5வது வார்டு திமுக உறுப்பினர் ராஜா வெற்றிபெற்றார்.

Update: 2022-03-27 04:45 GMT

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேரூராட்சியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க 11 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், சுயேட்சை 4 வார்டுகளிலும், பா.ம.க ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. இதில் 11-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லட்சுமிமூர்த்தி பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ஏற்கனவே நடைபெற்ற, துணைத்தலைவருக்கான தேர்தலில் 13-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சடையப்பன் தவிர மற்ற தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க. மற்றும் 3 சுயேச்சை உறுப்பினர்கள் உள்பட 17 உறுப்பினர்கள் வராததால் துணை தலைவருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று ப.வேலூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் அலுவலர்களான மோகனூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தங்கசாமி, கொல்லிமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கார்த்திக் ஆகியோர் முன்பு  5-வது வார்டு தி.மு.க உறுப்பினர் ராஜா, 6-வது வார்டு தி.மு.க உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் துணைத்தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தனர்.

2 பேர் மனு தாக்கல் செய்ததால் மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 5-வது வார்டு உறுப்பினர் ராஜா 11 வாக்குகளும், 6-வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் 7 வாக்குகளும் பெற்றனர். செந்தில்குமாரை விட ராஜா 4 வாக்குகள் அதிகம் பெற்றதால் ராஜா ப.வேலூர் பேரூராட்சிதுணைத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.

ஏற்கனவே தி.மு.க சார்பில் 6-வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் துணைத்தலைவருக்கான வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News