பரமத்தி அருகே மாடு திருடிய 2 பேர் கைது; சரக்கு ஆட்டோ பறிமுதல்
பரமத்தி அருகே மாடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்; சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள அர்த்தனாரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜய்குமார் (45), விவசாயி. இவர் அர்த்தனாரிபாளையத்தில் தனது தோட்டத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மாடு கத்தும் சத்தம் கேட்டு சென்று பார்த்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த பசு மாடு காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் காணாமல் போன பசு மாட்டை தேடியபோது, பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் ரோட்டில் பசு மாட்டை இருவர் சரக்கு ஆட்டோ ஒன்றில் ஏற்றிக் கொண்டு இருந்ததை பார்த்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து அவர்களின் உதவியுடன் சரக்கு ஆட்டோவில் மாடுகளை ஏற்றி கொண்டு இருந்தவர்களை பிடித்து பரமத்தி போலீசாரிடம் ஒப்படைத்தார்.
போலீசார் இருவரிடமும் நடத்திய விசாரணையில். அவர்கள் கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள பூங்குளத்துபாளையத்தை சேர்ந்த சதீஷ் (எ) சேகர் (45), ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணி (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாடு திருடிய இருவரையும் கைது செய்தது, மாடு திருட பயன்படுத்திய சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.