பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பரமத்திவேலூரில் ஆர்ப்பாட்டம்
பரமத்தி வேலூரில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நான்கு ரோடு அருகே, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக்கண்டித்து இடதுசாரிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் தங்கமணி தலைமை வகித்தார். பரமத்தி வேலூர் வட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரன், பொன்னம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெட்ரோல், டீசல், மீதான விலை உயர்வை, மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு ரேசன் கடைகள் மூலம் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்க வேண்டும். தாமதமின்றி, அனைவருக்கும் தடுப்பூசி போட உரிய நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், திரளான கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.