பரமத்திவேலூரில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள்: கலெக்டர் ஆய்வு
பரமத்திவேலூர் பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
பரமத்திவேலூர் பகுதியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி, ப.வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை டவுன் பஞ்சாயத்துக்களில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தேர்தல் வாக்குப்பதிவு நாளில் பயன்படுத்தப்பட உள்ள அழியாத மை, வாக்குப்பதிவு எழுது பொருட்கள், பல்வேறு பயன்பாட்டுக்கான உறைகள், ரப்பர் ஸ்டாம்புகள், உள்ளிட்ட பல்வேறு வாக்குபதிவு பொருட்கள் பட்டியலின்படி முழுவதுமாக உள்ளனவா என்று ஆய்வு செய்தார்.
மேலும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில், ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பாதுகாப்பு அறையின் முன் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதையும் அவர் பார்வையிட்டர்.
தொடர்ந்து பாண்டமங்கலம் அரசு துவக்கப்பள்ளியில் வகுப்பறைக்கு சென்று மாணவ, மாணவிளுடன் நீண்ட காலம் கழித்து பள்ளிக்கு வருகை தந்துள்ளதால் பள்ளி சூழல் பிடித்திருக்கிறதா என்று கேட்டார். அதற்கு பள்ளி மாணவ, மாணவிகள் பிடித்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். தினந்தோறும் சத்துணவில் வழங்கப்படும் உணவு வகைகள் குறித்தும், உணவு சுவையாக உள்ளதா என்றும் மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார். சத்துணவு கூடத்தில் உணவு சமைக்கும் பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வில் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.