ப.வேலூர் பகுதி அரசு பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

பரமத்திவேலூர் பகுதி அரசு பள்ளிகளில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-04-07 00:15 GMT

ப.வேலூர் தாலுக்கா, குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரேயாசிங், மாணவர்களின் கல்வித்தரத்தை பரிசோதனை செய்தார்.

பரமத்தி வேலூர் ஊராட்சி ஒன்றியம், குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஒழுகூர்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் மாவட்ட கலெக்டர், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறித்தும், ஆசிரியர்கள் நடத்தும் பாட விபரம் குறித்தும், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வருகை பதிவு குறித்தும் தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் உள்ள மாணவ, மாணவிகளின் விவரங்கள் குறித்து கேட்டு, அந்த மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் வகுப்பாசிரியர்கள் நேரில் சென்று பேசினார்களா என்றும், அவர்களை பள்ளிக்கு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளியில் மாணவ, மாணவிகளின் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் கல்வித்தரத்தை மாவட்ட கலெக்டர் பரிசோதித்தார்.

மாணவ, மாணவிகள் தங்களது முழு ஈடுபாட்டையும், உழைப்பையும் படிப்பில் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும், அப்போதுதான், இலக்கை அடைய முடியும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து, பள்ளிகளில் குடிநீர் வசதி, வகுப்பறை கட்டடங்கள் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வுகளின் போது பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News