பரமத்திவேலூரில் தேங்காய் விலை உயர்வு: தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி
பரமத்திவேலூரில், தேங்காய் விலை உயர்வால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
பரமத்திவேலூரில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. பரமத்தி, வேலூர், பாலப்பட்டி, மோகனூர், கபிலர்மலை, ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 2,176 கிலோ எடையுள்ள தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.26.50-க்கும், குறைந்தபட்சமாக கிலோ ஒன்று ரூ.24-க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ.25.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.55 ஆயிரத்து 778 மதிப்பிலான தேங்காய்கள் விற்பனை நடைபெற்றது.
இந்த வாரம், ஏலத்திற்கு 3 ஆயிரத்து 512 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.27.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.23.50-க்கும், சராசரியாக ரூ.26.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.92 ஆயிரத்து 157 மதிப்பிலான தேங்காய் விற்பனை நடைபெற்றது. தேங்காய் விலை உயர்வால் விவசாயிகள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.