பரமத்திவேலூர் அருகே கோவில் திருவிழாவில் மோதல், தடியடி. சாலை மறியல் பரபரப்பு
நாமக்கல் அருகே கோயில் விழாவில், இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது, போலீசார் தடியடி நடத்தினர், சாலை மறியல் நடந்தது. இதில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருத்தேர் திருவிழா முன்னிட்டு திருத்தேரை பொதுமக்கள் நேற்று காலை வடம்பிடித்து இழுத்தனர்.
திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடையவுள்ள இடத்திற்கு மாலை வந்த போது இருதரப்பினரடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் ஒருவரையொருவர் மீது தாக்குதல் நடத்தியும் அங்கிருந்த பொதுமக்கள், போலீசார் மற்றும் போலீசாரின் வாகனம் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன்காரணமாக தேர் நிலையை அடைவதற்கு முன்னரே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய ஒரு பிரிவினர் மீது உரிய நவடிக்கை எடுக்ககோரி மற்றொரு பிரிவினர் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் யாரும் வராததால் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலை காவிரி இரட்டை காவிரி பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் காவிரி ஆற்று பாலத்தில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.