ரசாயனக்கழிவு கொட்டிய லாரி, பொக்லைன் இயந்திரம் சிறை பிடிப்பு
பரமத்தி வேலூர் அருகே, ரசாயனக் கழிவுகளைக் கொட்டிய லாரி, பொக்லைன் இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையம் பஞ்சாயத்து, சுண்ணாம்புக்கல்மேடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் பள்ளம் தோண்டி, அதில் கடந்த சில நாட்களாக வெள்ளை நிற கழிவு மண்னை டிப்பர் லாரி மூலம் கொண்டு வந்து கொட்டி, பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளத்தில் மண் நிரப்பி மூடியுள்ளனர்.
கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதது. அங்கு கொட்டப்படுவது, தொழிற்சாலையில் இருந்து வெளியாகும், ரசாயனம் கலந்த கழிவுப்பொருள் என தெரிய வந்தது. இதையொட்டி அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை சிறை பிடித்தனர். பின்னர் பரமத்திவேலூர் தாசில்தாருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த பரமத்தி போலீசாரிடம், அப்பகுதியில் கொட்டப்பட்டு வரும் ரசாயனக் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு, குடி தண்ணீர் மற்றும் விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் எனவே அந்த நிலத்தில் கொட்டப்பட்டுள்ள ரசாயனக் கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி, பரமத்தி போலீசார் பொக்லைன் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.