வெங்காய மண்டி அதிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: மனைவி, மகன் உயிரிழப்பு
பரமத்திவேலூரில் கடன் பிரச்சனை காரணமாக வெங்காய மண்டி அதிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சுல்தான்பேட்டை, சேடர் தெருவை சேர்ந்தவர் சையத்அக்பர் (60), வெங்காய மண்டி நடத்தி வந்தார். இவரது மனைவி பாத்திமா (55). இவர்களுக்கு சிக்கந்தர் பாஷா (35) மற்றும் பர்கத்(30) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இதில் சிக்கந்தர் பாஷா திருமணமாகி தற்போது லண்டனில் வேலை பார்த்து அங்கேயே வசித்து வருகிறார். பர்கத் மட்டும் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தொழிலில் ஏற்பட்ட கடன் பிரச்சினை காரணமாக விரக்தியடைந்த சையத் அக்பர், சம்பவத்தன்று இரவு குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து அவரது மனைவி பாத்திமா, மகன் பர்கத் ஆகியோருடன் சேர்ந்து குடித்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
விஷம் குடித்து மயக்கமடைந்த நிலையில், அவரது உறவினர்கள் அவர்களை மீட்டு, பரமத்தி வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி பாத்திமா மற்றும் அவரது மகன் பர்கத் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
சையத் அக்பருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து இறந்துபோன பாத்திமா, அவரது மகன் பர்கத் ஆகியோரின் உடலை பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதணைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.